"தவணை கட்ட முடியலன்னா பிச்சை எடு" குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் குதறிய ஃபைனான்ஸ் நிறுவன ஊழியரின் ரௌடித்தனம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இயங்கி வரும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கிய ஓட்டுநர், ஒரே ஒரு மாத தவணை கட்டவில்லை என்பதற்காக, அவரை போனில் அழைத்த ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர், ஆபாச சொற்களால் அவரது மனைவி உட்பட குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசியுள்ளார். பிச்சை எடுத்தாவது தவணையைக் கட்டு, இல்லை என்றால் தற்கொலை செய்துகொண்டு சாவு என்றெல்லாம் பேசிய ஆடியோவை வைத்து காவல் துறையில் பைனான்ஸ் நிறுவன ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் "5 ஸ்டார் - சொத்துக் கடன்" என்ற பெயரில் மைக்ரோபைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தளிர் மறுகூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான எடிசன் என்பவர், கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு பைவ் ஸ்டார் நிறுவனத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
13 மாதங்களாக மாத தவணையாக 6 ஆயிரத்து 130 ரூபாயை முறையாகக் கட்டி வந்த எடிசன், வாகன தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக லாரியை விட்டுவந்ததால், வருமானமின்றி, ஏப்ரல் மாத தவணை மட்டும் கட்டவில்லை என கூறப்படுகிறது. எடிசன் தனது சூழ்நிலை குறித்து ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் எடுத்துக் கூறியும், அவரைத் தொடர்பு கொண்ட ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் பாலாஜி என்பவர், உடனடியாக பணம் கட்ட வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அவரிடம் முதலில் பொறுமையாக பேசிய எடிசனும், எதிர்முனையில் பேசிய ஊழியர் எல்லை மீறி பேசியதால், பொறுமையிழக்க, இருவரது உரையாடலும் ஆபாச ஆறாக ஓட ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் பாலாஜி, எடிசனின் மனைவியைப் பற்றி தகாத முறையில் பேசிதோடு, “பிச்சை எடுத்தாவது தவணையை கட்டு, இல்லை என்றால் தற்கொலை செய்துகொண்டு சாவு” எனவும் பேசியுள்ளார்.
இதனால் மனமுடைந்த எடிசன், தற்கொலை எண்ணம் மேலிடும் அளவுக்கு தன்னை ஊழியர் பாலாஜி பேசிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் பாலாஜியிடம் விளக்கம் கேட்டபோது, எடிசன் தான் முதலில் ஆபாசமாகப் பேசியதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் கூறியவர், ஆதார ஆடியோவை உடனடியாக அனுப்புவதாகக் கூறிவிட்டு, அமைதியாகிவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் ரூபனிடம் விளக்கம் கேட்ட போது, எடிசனை சமாதானப்படுத்திவிட்டதாகவும் செய்தி வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவ்வாறு தன்னை அந்நிறுவனம் தொடர்பு கொள்ளவில்லை என கூறும் எடிசன், ஊழியர் பாலாஜி மீது நடவடிக்கை கோரி போலீசில் புகாரளித்துள்ளார்.
கடன் தவணையை கட்டவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, கடன் பெற்றவரை இப்படி கண்ணியக்குறைவாகப் பேசும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Comments